நியூயார்க்: கனடா வனங்களில் ஏற்பட்ட தீயால் அருகில் உள்ள அமெரிக்காவில் பரவி வரும் புகையால் கடும் மாசு ஏற்பட்டுள்ளது. என்-95 மாஸ்க் அணிய வேண்டும் என நியூயார்க் நகர மக்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
கனடாவின் பல இடங்களில் கடும் வெப்பம் காரணமாக காடுகளில் ஏக்கர் கணக்கில் தீ பற்றி எரிந்தது. இதன் காரணமாக கனடா மற்றும் இதனையொட்டிய தீவு பகுதிகள், அருகில் உள்ள அமெரிக்க கிழக்கு கடற்கரை, மத்திய மேற்கு பகுதிகளில் புகை மண்டலம் பரவியிருக்கிறது. நியூஜெர்சியின் ஹட்சன் நதியை கடந்து நியூயார்க் நகரை ஆக்கிரமித்துள்ளது.
நியூயார்க் கவர்னர் கேத்தி கவுச்சல் விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். வீட்டுக்குள் இருப்பதே நல்லது. அனைவரும் மாஸ்க் அணிவது நல்லது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
நியூயார்க் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. குதிரை சவாரிகள் ரத்தாகி உள்ளது. நகர மேயர் எரிக் ஆதம்ஸ் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுள்ளார்.
இந்த கனடாவின் புகையால் பாக்தாத், டில்லி நகரை விட தற்போது நியூயார்க் அதிக காற்று மாசு கொண்டதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 விவரப்படி ஈராக், பாகிஸ்தான், பஹ்ரைன், வங்கதேசம் ஆகிய நாடுகள் அதிகம் மாசு கொண்ட நாடாக இருந்தது. இந்தியா உலக பட்டியலில் 8 வது இடத்தில் இருந்தது. தற்போது நியூயார்க் மாசு பட்டியலில் மேல் இடத்திற்கு நகர்ந்துள்ளது.