வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில், கவர்னர் தாமதம் செய்வதால், பல்கலை பட்டம் கிடைக்காமல் 9.29 லட்சம் மாணவர்கள் காத்திருக்கின்றனர், என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் சேர அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஜூலை 2ல் பொறியியல் கவுன்சிலிங் துவங்க உள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக 18,600 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
கவர்னரின் நடவடிக்கையால் பல்கலைகழகங்களில் பட்டமளிப்பு விழா தாமதம் ஏற்படுகிறது. துணைவேந்தர்கள் நியமனத்திலும் தாமதம் ஏற்பட கவர்னரே காரணம். பட்டமளிப்பு விழா குறித்து தமிழக அரசிடமும் கவர்னர் கேட்பது கிடையாது.
வட இந்தியாவில் இருந்து சிறப்பு விருந்தினர்களை அழைத்து வர விரும்புகிறார். மத்திய அமைச்சர்களை அழைத்து வர நினைக்கிறார். அவர்களின் தேதி கிடைப்பதில் தாமதம் ஆவதால், பட்டமளிப்பு விழா தாமதம் ஆகிறது. இதற்கு கவர்னர் தான் பதில் சொல்ல வேண்டும். 9.29 லட்சம் மாணவர்கள், பட்டம் கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகம் தவிர மற்ற 12 பல்கலைகழகங்களில் பட்டமளிப்பு விழா நடக்கவில்லை. இவ்வாறு பொன்முடி கூறினார்.