வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வெளிநாடுகளில் இந்தியா குறித்து ராகுல் குற்றம் சாட்டி வருகிறார் என நிருபர்கள் கேள்விக்கு, வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் முடிவு தெரியவரும் எனவும், அவரது பேச்சு நாட்டு நலனுக்கு நல்லது அல்ல எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ., அரசின் 9ஆண்டு கால சாதனையை விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு புதுடில்லியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
உலகம் இந்தியாவை நம்பிக்கையும் திறமையும் கொண்ட நாடாக பார்க்கிறது. இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என உலகம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.
உலகம் பெரும்பாலான நாடுகள் வளர்ச்சிக்கான பங்குதாரர்களாக இந்தியாவைப் பார்க்கின்றன. தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதனால் இளைஞர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
ராகுல் வெளிநாடு செல்லும் போதெல்லாம் இந்தியாவை விமர்சிப்பதும், நமது அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதும் வாடிக்கையாக வைத்து உள்ளார். வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் முடிவு தெரியவரும். வெளிநாடுகளில் அரசியல் குறித்து பேசுவது, நாட்டு நலனுக்கு நல்லது அல்ல. அடுத்த பார்லி., லோக்சபா தேர்தலில் பாஜ., ஆட்சி அமைக்கும்.
இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் ஒரு சமயத்தில் ஒரு கட்சி வெற்றி பெறுகிறது. அடுத்த தேர்தலில், வேறொரு கட்சி வெற்றி பெறுகிறது. இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் ஒரு சமயத்தில் ஒரு கட்சி வெற்றி பெறுகிறது. வேறொரு சமயத்தில் வேறொரு கட்சி வெற்றி பெறுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்றால், இது போன்ற ஆட்சி மாற்றங்கள் நடைபெறாது. இவ்வாறு அவர் கூறினார்.