தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடுகள் குறித்து, விவசாயிகளிடமிருந்து கருத்துக்களை கேட்கும் கூட்டம் தஞ்சாவூரில் இன்று (8ம் தேதி) கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப் வரவேற்புரையாற்றினர்.
கூட்டத்தில், தொடக்க உரையாற்றிய வேளாண்மை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளும், விவசாயிகளின் பிரச்சனைகளை அறிந்து, தீர்த்து வைக்கும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு முன்பாக ஆய்வு கூட்டம் விவசாயிகளைக் கொண்டு நடத்தப்பட்டது. அதேபோல் மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் இக்கூட்டம் நடைபெறுகிறது. வருகிற 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் சாகுபடிக்கு தேவையான வசதிகள் குறித்து விவசாயிகள் தெரிவிக்கும் கருத்துக்களை தொடர்புடைய கூட்டுறவு, வேளாண்மை, நுகர்பொருள் வாணிபக் கழக துறைகளைச் சார்ந்த அதிகாரிகளை கொண்டு அந்த துறை சார்ந்த குறைகளை தீர்த்து வைக்கும் விதமாக இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் கருத்துக்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதை உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு பேசினார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன், வேளாண் துறை ஆணையர் சுப்பிரமணியன், சர்க்கரை துறை ஆணையர் விஜய ராஜ்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் பிரபாகர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் பேசுகையில், குறுவை சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் கடன் வழங்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிர் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படவில்லை. குறுவைக்கு அந்த பயிர் காப்பீடு திட்டத்தை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்திற்கு உரிய பங்கினை காவிரி நீர் பங்கினை கர்நாடகத்தில் இருந்து பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வைத்தனர்.