மூணாறு: நெல்லை அருகே நகை வியாபாரியை தாக்கி ரூ.1.5 கோடி கொள்ளையடித்த சம்பவத்தில் கேரளா திருச்சூர், சாலக்குடியைச் சேர்ந்த பெபின்சாஜூ 26, எட்வின்தாமஸ் 26, ஆகியோர் தமிழக போலீசாரிடம் சிக்கினர்.
நெல்லை டவுனைச் சேர்ந்தவர் நகை வியாபாரி சுஷாந்த் 40. இவர் நகை வாங்குவதற்கு ரூ.1.5 கோடி பணத்துடன் மே 30ல் கேரள மாநிலம் நெய்யாற்றங்கரையை நோக்கி இரண்டு ஊழியர்களுடன் காரில் சென்றார். அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
விசாரணை: நான்குநேரி டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் ஐந்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் சிக்கிய அலைபேசி சிக்னலை வைத்து கொள்ளையர்களை பின்தொடர்ந்தனர். தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் பல பகுதிகளுக்கு காரில் சென்ற கொள்ளையர்களை தனிப்படை போலீசாரும் பின் தொடர்ந்தனர். இறுதியாக கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பூப்பாறை வழியாக மூணாறை நோக்கி வந்தவர்களை போலீசார் பின் தொடர்வதை அறிந்து காரை வேகமாக ஓட்டியபோது தேவிகுளம் உள்பட சில பகுதிகளில் எதிரே வந்த வாகனங்களில் மோத நேரிட்டது.
உஷார்: இதனிடையே தமிழக போலீசார் இடுக்கி எஸ்.பி.,யை தொடர்பு கொண்டு தகவல் அளித்ததால் தேவிகுளம், மூணாறு ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். சினிமாவை மிஞ்சும் காட்சி: தேவிகுளம் பகுதியை கொள்ளையர்கள் கடந்ததால் மூணாறு போலீஸ் ஸ்டேஷன் அருகே இன்ஸ்பெக்டர் ராஜன் கே.அரண்மனா தலைமையில் போலீசார் போலீஸ் வாகனத்தை ரோட்டின் குறுக்கே யிட்டு காத்திருந்தனர். அப்போது அதி வேகமாக வந்த கொள்ளையர்களின் கார் போலீஸ் வாகனத்தை கடக்க முயன்றபோது எதிரே வனத்துறையினர் வாகனம் வந்ததால் கடக்க இயலவில்லை.
காரை திருப்ப இயலாத நிலை ஏற்பட்டதால் பின்னோக்கி அதிவேகமாக காரை இயக்கியபோது சுற்றுலா கார், ஆட்டோ உள்பட பல வாகனங்களில் மோதி, அவை சேதமடைந்தன. டூவீலரில் வந்த பலர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். வாகனங்களில் மோதிய வேகத்தில் கொள்ளையர்களின் கார் பின்புற டயர் வெடித்து ரோட்டோரம் மோதி நின்றது. காரில் இருந்து தப்ப முயன்ற கொள்ளையர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து தமிழகம் கொண்டு சென்றனர்.
பிடிபட்ட பெபின்சாஜூ எட்டு வழக்குகளிலும், எட்வின்தாமஸ் இரண்டு வழக்குகளிலும் சிக்கியவர்கள் என மூணாறு போலீசார் தெரிவித்தனர்.