வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்திய கல்வி முறையை ஆங்கிலேயர்கள் அழித்து விட்டனர் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டில்லியில் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
இந்த பல்கலை., வளாகத்தில் சிறப்பான வசதிகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. கட்டட அமைப்பை பொறுத்தவரையில் இந்த புதிய வளாகம், நாட்டில் உள்ள சிறந்த வளாகங்களில் ஒன்றாகும். இந்த வளாகம் 2,500 மாணவர்களுக்கு இடமளிக்கும். இந்த பல்கலை., வளாகத்தினை சுற்றி புதிய கடைகள் திறக்கப்படும். இதன் மூலம், வேலைவாய்ப்புகள் உருவாகும்.
தற்போது, டில்லி அரசு உயர் கல்வியில் கவனம் செலுத்தி வருகிறோம். வேலைவாய்ப்பினை கொடுக்கும் கல்வி கிடைக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும்.இந்த பல்கலை., யில் மாணவர்களுக்கு ஆட்டோமேஷன், டிசைன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தரவு மேலாண்மை மற்றும் பல புதுமையான விஷயங்கள் கற்றுத் தரப்படும். இந்த தொழில்நுட்ப உலகில் இதுபோன்ற கல்விதான் மாணவர்களுக்கு தேவை.
ஆட்சிக்காலத்தில், பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுவதன் மூலம் நாடு முன்னேற்றமடையும் என சிலர் கூறுவார்கள். ஆனால், புதிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை உருவாக்குவதே நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். இந்திய கல்வி முறையை ஆங்கிலேயர்கள் அழித்து விட்டனர்.
ஆங்கிலேயர்கள் நிர்வாக வேலைகளை கவனித்துக்கொள்ளும் எழுத்தர் பணிக்காக இந்தியர்களை பயன்படுத்திக் கொண்டனர். மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இருக்காமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.