வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
செஹோர்: மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை, 55 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் சடலமாக நேற்று மீட்கப்பட்டது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள முகவாலி கிராமத்தைச் சேர்ந்த ராகுல் குஷ்வாஹாலி - ராணி தம்பதியின் மகள் சிருஷ்டி. இரண்டரை வயதான இந்த குழந்தை, கடந்த 6ம் தேதி வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் விளையாடிய போது, மூடப்படாமல் இருந்த 300 அடி ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், குழந்தையை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனர்.
குழந்தையை உயிருடன் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க, அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டதை அடுத்து, இதற்கான பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டன. ஆழ்துளை கிணற்றின் அருகிலேயே பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக பள்ளம் தோண்டும் பணி இரவு, பகலாக நடந்தது. முதலில் 40 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை, இயந்திரங்களின் அதிர்வால் வழுக்கி, 100 அடி துாரத்தில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து, குழந்தைக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், 'ரோபோடிக்ஸ்' நிபுணர்களின் உதவியுடன், மீட்பு பணி மூன்றாவது நாளான நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 55 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் குழந்தையின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. டாக்டர்களும் இதை உறுதி செய்தனர். மூன்று நாட்களாக நடந்த முயற்சி பலனளிக்காமல் குழந்தை இறந்தது, முகவாலி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், ஆழ்துளை கிணறு உள்ள நிலத்தின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.