அந்தரத்தில் தொங்கும் தெரு மின்விளக்கு
உத்திரமேரூர் பேரூராட்சி, சோமநாதபுரம் 2வது வார்டுக்கு உட்பட்ட முத்துராம் பிள்ளை தெருவில், மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மின் கம்பத்தில், 'டியூப் லைட்' அமைக்கப்பட்டது. அந்த டியூப் லைட் பட்டியுடன் கழன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது.
இதனால், அப்பகுதியில் இருள் சூழ்ந்து உள்ளது. மேலும், பலத்த காற்றடிக்கும் போது 'டியூப் லைட்' அவ்வழியாக செல்வோரின் தலையில் விழுந்து காயம் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே தொங்கி கொண்டிருக்கும் டியூப் லைட்டை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வெ.தனசேகரன், உத்திரமேரூர்.
இலவச கழிப்பறை அமைக்கப்படுமா?
உத்திரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து, பின்பக்கம் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் வழியில் சந்து ஒன்று உள்ளது.
இந்த சந்து பகுதியில் இயற்கை உபாதை கழித்து அசுத்தப்படுத்துகின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
இதனால், முருகர் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் முகம் சுளித்தபடியே வந்து செல்கின்றனர். எனவே, சந்து பகுதியில் உள்ள அசுத்தங்களை அகற்றி, மீண்டும் அசுத்தமாவதை தவிர்க்க அப்பகுதியில் இலவச கழிப்பறை கட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்.
திருமுக்கூடல் கூட்டு சாலையில் மின்விளக்கு வசதி தேவை
திருமுக்கூடலை சுற்றி, மதூர், அருங்குன்றம், பட்டா, சிறுமையிலுார், சித்தலப்பாக்கம், புல்லம்பாக்கம், வயலக்காவூர், பினாயூர், பழவேரி, சீத்தாவரம், அரும்புலியூர், கரும்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், தினமும் பழையசீவரம் மேம்பாலம் அருகே உள்ள திருமுக்கூடல் கூட்டுச்சாலைக்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இதனால், திருமுக்கூடல் கூட்டுசாலை பேருந்து நிறுத்தத்தில், நள்ளிரவு வரை பயணியர் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். இப்பேருந்து நிறுத்தப் பகுதியில், மின்விளக்கு வசதி இல்லாததால் சுற்றிலும் இருள் சூழந்துள்ளது. எனவே, பிரதான இச்சாலை பகுதியில், உயர் கோபுர மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
- கோ.சத்தியமூர்த்தி, திருமுக்கூடல்.
மழைநீர் கால்வாயை சீரமைக்க வேண்டுகோள்
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வெள்ளைகேட் மேம்பாலம் உள்ளது. இம்மேம்பாலத்தை ஒட்டி, அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும், சர்வீஸ் சாலை உள்ளது.
இந்த சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால்வாய் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த கால்வாய் மீது போடப்பட்ட கான்கிரீட் தளத்தின் மீது, கனரக வாகனம் சென்றதால், உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த சாலை வழியாக செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இதை சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைக்க வேண்டும்.
- -கே.நாராயணன், காஞ்சிபுரம்.