காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை புதிய ரயில் நிலையத்தில் இருந்து, காலை நேரத்தில் இயக்கப்படும் ரயிலில் பயணிக்க, டிக்கெட் வழங்கும் கவுன்டரில் டிக்கெட் எடுக்க, பயணியர் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்க வேண்டிய நிலை இருந்ததால், காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
இதனால், தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் சார்பில், தொலைதுார ரயிலுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் மைய வளாகத்திற்குள், தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டு, கடந்த ஏப்., மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த இயந்திரம் வைக்கப்பட்டு இருந்த இடம், பாசஞ்சர் ரயிலில் பயணிக்கும் பயணியருக்கு தெரியாத இடத்தில் இருந்ததால், பாசஞ்சர் ரயிலில் பயணிக்கும் பயணியர் பலர் வழக்கம் போல, பாசஞ்சர் ரயிலுக்கான கவுன்டரில் டிக்கெட் எடுத்து பயணித்து வந்தனர்.
இதனால், பாசஞ்சர் ரயில் டிக்கெட் கவுன்ட்டருக்கு செல்லும் வழியில், ரயில்நிலைய நடைமேடை நுழைவாயில் அருகில், தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.