புதுடில்லி : ‛‛நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அதிகார பசியில் காங்., கட்சியினர், நாட்டின் ஜனநாயகத்தை தாக்குகின்றனர்,'' என, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு மத்தியில் பதவியேற்று, ஒன்பது ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
இது குறித்து, இன்று (ஜூன்.,8)ம் தேதி, டில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி, காங்., முன்னாள் தலைவர் ராகுல், கடந்த மாதம், அமெரிக்க பயணத்தின்போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு, பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறியதாவது:
பா.ஜ.,வை முஸ்லீம்களுக்கு எதிரான கட்சி என, பிரச்சாரம் செய்கின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டே, மோடி அரசு செயல்படுகிறது.
முஸ்லீம் சமூகத்தின் பாதுகாவலர்கள் என, தங்களை அழைத்து கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில், முஸ்லீம்களுக்காக பட்ஜெட்டில், ரூ.12,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த, 9 ஆண்டுகளில்ல பட்ஜெட்டில் ரூ.31,450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை, புள்ளி விபரங்களே கூறுகின்றன. காங்., தலைவர்கள வெளிநாடுகளுக்கு சென்று, நம் நாட்டின் ஜனநாயகத்தை பழிக்கிறார்கள்.
பார்லி., தேர்தல் நெருங்குவதால், அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில், அதிகார பசியில், நாட்டின் ஜனநாயகத்தை தாக்குகிறார்கள்.
பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைவதும், அவர்களின் ஆசையும், பீஹாரில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது போல், அடித்து செல்லப்படும்.
சீக்கியர்களை படுகொலை செய்தது, நிலக்கரி ஊழல், மாட்டு தீவன ஊழல் போன்வற்றில் ஈடுபட்டவர்களோடு கைகுலுக்குவது, எந்த மாதிரியான அன்பு ?

செங்கோலை அவமதிப்பது, சொந்த நாட்டின் திறப்பு விழாவை புறக்கணிப்பது, ‛தி கேரளா ஸ்டோரி' படம் வெளியானபோது, வாயை மூடிக் கொண்டிருந்தது, நாட்டை திட்டுபவர்களுடன் கைகுலுக்குவது, இவையெல்லாம் எந்த மாதிரியான அன்பு?
இவ்வாறு, அவர் கூறினார்.