வனத்துறையில் என்.ஓ.சி., கொடுக்க, ஏக்கர் கணக்கில் லஞ்சம் கேட்பதால், தமிழகத்தில் 'ஹாகா' பகுதிகளின் எல்லையை மறுவரையறை செய்ய வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
![]()
|
தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை ஆகிய 16 மாவட்டங்களில், 42 தாலுகாக்களில் 557 கிராமங்கள், மலையிட பாதுகாப்பு குழுமத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த கிராமங்கள், மலை மற்றும் வனப்பகுதிகளை ஒட்டி அமைந்திருப்பதால், வனம், நீர் நிலை, கனிம வளம் மற்றும் விவசாயம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு, இப்பகுதிகளில் புதிய லே-அவுட் அமைக்க, வனத்துறை, வருவாய்த்துறை, வேளாண் துறை மற்றும் கனிம வளத்துறையிடம் தடையின்மைச் சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இயற்கையைக் காப்பதற்கு மாறாக, ஏக்கர் கணக்கில் லஞ்சம் வாங்குவதற்காகவே, இந்த தடையின்மைச் சான்று பயன்படுகிறது.
ஏக்கர் கணக்கு லஞ்சம்
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போதே, இந்த 'ஏக்கர் கணக்கு லஞ்ச முறை' வனத்துறை, வருவாய்த்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதை ஒழித்து, ஒற்றைச்சாளர முறையில் திட்ட அனுமதி வழங்கப்படும் என்று தேர்தலில் தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால் இப்போது, அ.தி.மு.க., ஆட்சியில் வாங்கப்பட்டதை விட, பல மடங்கு அதிகமாக லஞ்சம் வாங்கப்படுகிறது.
குறிப்பாக, வனத்துறையில் என்.ஓ.சி., கொடுக்க, அமைச்சருக்கு மட்டுமே ஏக்கருக்கு ரூ.5 லிருந்து ரூ.6 லட்சம் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில், தி.மு.க., தலைமைக்கழகப் பேச்சாளர் கூத்தரசன் பேசிய ஆடியோ, சமீபத்தில் வெளியானது.
இதுபற்றி முதல்வர் விசாரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த 'ஹாகா' பகுதியை, வருவாய் கிராமங்களுக்குப் பதிலாக, துாரமாகக் கணக்கிட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
![]()
|
மறுவரையறை அவசியம்
தற்போது வருவாய் கிராமத்தின் அடிப்படையில், 'ஹாகா' எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகள், வனம் மற்றும் மலைப்பகுதியிலிருந்து வெகுதொலைவில் அமைந்துள்ளன. அதிலும் பல பகுதிகள், சிறு நகரங்களாகவே வளர்ந்து விட்டன. ஆனாலும் அந்தப் பகுதியில் லே-அவுட் அமைக்கவும், 'ஹாகா' பெயரில் லஞ்சம் வாங்கப்படுகிறது.
கடந்த அ.தி.மு.க.,ஆட்சியின்போது, வன எல்லையிலிருந்து 150 மீட்டர் துாரத்தை மட்டும் 'ஹாகா' பகுதியாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை, அரசிடம் வைக்கப்பட்டது. அது பரிசீலனையில் இருந்தபோது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஆட்சி மாற்றத்துக்குப் பின், வன எல்லையிலிருந்து 250 மீட்டர் துாரத்துக்கு 'ஹாகா' பகுதியாக அறிவிக்கலாம் என்று, கொள்கைரீதியாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இதற்கான அறிவிப்பு வருவதில் இன்னும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் தமிழகத்தில், 557 மலையோர கிராமங்களில் வசிக்கும் பல லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இனியாவது 'ஹாகா' பெயரில், லஞ்சம் வாங்கப்படுவதைக் குறைத்து, மலையோர கிராம மக்களின் நலன் கருதி, 'ஹாகா' எல்லையை மறுவரையறை செய்து, துாரத்தின் அடிப்படையில் அறிவிக்க வேண்டியது, தமிழக அரசின் தார்மீகக் கடமையாகும்.
-நமது சிறப்பு நிருபர்-