புதுடில்லி,புதுடில்லியில் இருந்து அதிகபட்ச கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த சில வழித்தடங்களில், 14 - 61 சதவீதம் வரை விமான டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
விமான சேவை நிறுவனங்கள் டிக்கெட் விலையை கடுமையாக உயர்த்தியது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
![]()
|
இதன் தொடர்ச்சியாக, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில், விமான நிறுவனங்களின் ஆலோசனைக் குழு கூட்டம் புதுடில்லியில் நேற்று நடந்தது.
அப்போது, விமான கட்டணங்களை சுயமாக ஒழுங்குபடுத்தவும், நியாயமான விலையை பராமரிக்கும்படியும், விமான நிறுவனங்களை அமைச்சர் வலியுறுத்தினார்.
கூட்டத்துக்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:
விமான டிக்கெட் கட்டணங்களை நிர்ணயிக்கும் உரிமை விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவை, 'சீசன்' அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.
விமான சேவை குறைவாக உள்ள வழித்தடங்களில் தேவை அதிகரிக்கும் போது டிக்கெட் விலை உயர்த்தப்படுகிறது. இந்த விலையை நிர்ணயிப்பதில் விமான சேவை நிறுவனங்கள் சில வழிமுறைகளை பின்பற்றுகின்றன.
ஆனாலும், விமான நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வுடன், விலை உயர்வில் வரம்பை பின்பற்ற வேண்டும்.
மணிப்பூர், ஒடிசா போன்ற மாநிலங்களில் சற்றும் எதிர்பாராத அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த நேரத்தில், விமான டிக்கெட் விலை உயர்த்துவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
குறிப்பாக, புதுடில்லியில் இருந்து, ஸ்ரீநகர், லே, மும்பை, புனே, ஆமதாபாத், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு அதிகபட்ச கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
இவை, பயணியரின் துயரத்தை மேலும் அதிகரிக்கின்றன. இது குறித்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, புதுடில்லியில் இருந்து ஸ்ரீநகர், லே, புனே, மும்பை வழித்தடங்களில் செல்லும் விமான டிக்கெட் கட்டணங்களை 14 - 61 சதவீதம் குறைக்க கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement