வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக, நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
ந.உறந்தை மைந்தன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தற்போது, 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, பல்வேறு நெருக்கடிகள் மற்றும் சர்ச்சைகளை தாண்டி, ஊழலற்ற நல்லாட்சி நடத்தி வருவதுடன், திறமையான நிர்வாகத்தாலும் சாதனை படைத்துள்ளது.
கடந்த, 2014 மே, 26ல் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு பொறுப்பேற்றது. 30 ஆண்டுகளுக்கு பின், தனிப்பெரும்பான்மையுடன் அமைந்த அரசு என்பதால், மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஒரு காலகட்டத்தில், குஜராத் கலவரத்தை காரணம் காட்டி, அம்மாநில முதல்வராக இருந்த மோடிக்கு, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள், 'விசா' வழங்க மறுத்தன. இதனால், மோடி பிரதமராக பதவியேற்ற போது, உலக நாடுகள் உடனான உறவு எப்படி இருக்குமோ என, பலரும் சந்தேகம் எழுப்பினர்.

ஆனால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளுடன் மட்டுமின்றி, முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுடனும், மோடி ஏற்படுத்திய நெருங்கிய நட்பு மற்றும் நல்லுறவாலும், சர்வதேச உறவுகளை திறம்பட கையாண்டதாலும், நம் நாட்டிற்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன.
மோடியை, 'பாஸ்' என்று, ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டும் அளவிற்கு, உலகில் சிறந்த தலைவராக உயர்ந்திருக்கிறார் என்றால், அது, இந்தியர்களுக்கு கிடைத்த பெருமை.
கொரோனா பேரிடர் காலத்தில், 130 கோடி மக்கள் தொகை உடைய, இந்தியாவின் நிலை என்னவாகுமோ என, உலகமே கவலைப்பட்ட போது, 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை குறுகிய காலத்தில் செலுத்தி, மக்களை பாதுகாத்தது, மோடி தலைமையிலான அரசு.
அத்துடன், தடுப்பூசி தயாரிக்க முடியாத பல நாடுகளுக்கு, கொரோனா தடுப்பூசிகளையும் இந்தியா வழங்கியது. சில நாட்களுக்கு முன், பப்புவா நியூகினியா நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றபோது, அவரது காலில் விழுந்து அந்நாட்டு பிரதமர் ஆசி பெற்றது, தடுப்பூசி வழங்கியதற்காக அவர் செலுத்திய நன்றியின் வெளிப்பாடு.
ஒன்பது ஆண்டுகளாக தனக்கும், கட்சிக்கும் ஏற்பட்ட சோதனைகளையும், வேதனைகளையும் சாதனையாக்கி, மக்களின் அமோக ஆதரவுடன் நல்லாட்சி புரிந்து வருகிறார்பிரதமர் மோடி. அப்படிப்பட்டவர், வரும் லோக்சபா தேர்தலிலும் சாதனை படைத்து, மூன்றாவது முறையாக வெற்றிக்கொடி நாட்டுவார் என்பதில், எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை!