வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டதை அடுத்து, காலியாக உள்ள கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இடைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன. இங்கு அவரின் சகோதரி பிரியங்கா போட்டியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், ராகுல் உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதியில் தோல்வியடைந்த அவர், வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி., ஆனார்.
தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியை அவதுாறாக பேசியது குறித்து தொடரப்பட்ட வழக்கில், குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவரின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது.

இதையடுத்து, வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. லோக்சபாவுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், முன்னதாக வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ள தலைமை தேர்தல் ஆணையம், இதற்கான ஏற்பாடுகளை துவக்கியுள்ளது.
இந்த தொகுதிக்கான மாதிரி ஓட்டுப்பதிவு, அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று நடத்தப்பட்டது. இந்நிலையில், வயநாடு தொகுதியில் ராகுல் சகோதரி பிரியங்கா போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.
ராகுலின் எம்.பி., பதவி பறிக்கப்பட்ட பின்னரும், காங்., சார்பில் அங்கு நடந்த பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற பிரியங்கா, வயநாடு தொகுதி மக்களை அடிக்கடி சந்தித்து வருவதால், அவரே அந்த தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.