மாணவர்களை சந்திக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளது தொடர்பாக கமல் ரசிகர்கள் பெயரில் வெளியான விமர்சனம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அரசியலுக்கு வரும் ஆர்வத்தில் உள்ள விஜய் தன் ரசிகர்கள் வாயிலாக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். தேசிய ஜாதிய தலைவர்களின் பிறந்த நாட்களில் அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளில் துவங்கி அன்னதானம் நிதியுதவி நலத் திட்ட உதவிகள் என அரசியல் தொடர்பான அத்தனை நடவடிக்கைகளிலும் அவரது ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக வரும் 17ல் மாணவர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை கவுரவப்படுத்த உள்ளார்.
இதை விமர்சித்து கமல் ரசிகர்கள் வெளியிட்டுள்ள பதிவில் 'வகுப்பிலேயே சேர முடியாதவங்களை தேடிப்பிடிச்சு பல ஆண்டுகளாக படிக்க வைத்திருக்கிறார் தம்பி சூர்யா' என நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக கூறியுள்ளனர். இந்த பதிவு விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறியதாவது: கமல் ரசிகர்கள் பெயரிலான 'டுவிட்டர்' பதிவு போலியானது. விஜய் பிறந்த நாளில் 'லியோ' படத்தின் முன்னோட்ட வீடியோ பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த வீடியோவுக்கு கமல் தான் பின்னணி குரல் கொடுத்து இருக்கிறார். தொழில் ரீதியாக கமல் - விஜய் இணைந்து செயல்படுகின்றனர். அரசியல் களத்தில் அவர்கள் இணைந்து செயல்படுவரா என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -