வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பொள்ளாச்சி: 'கேரளாவுக்கு, 10 - 14 வீல்கள் கொண்ட வாகனங்களில், கனிமவளம் அதிகளவு கொண்டு சென்றாலும் கண்டு கொள்வதில்லை. தமிழக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என, டிப்பர் லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், கனிமவளங்களை எடுத்துச் செல்லும் டிப்பர் லாரி உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில், சப் - கலெக்டர் பிரியங்கா தலைமை வகித்தார். கனிம வளத்துறை உதவி இயக்குனர் சசிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
டிப்பர் லாரி உரிமையாளர்கள் பேசியதாவது: தமிழகத்திற்குள் கனிம வளம் கொண்டு செல்லும் லாரிகளில், அனுமதி சீட்டு இல்லை என, அதிகாரிகள் பிடிக்கின்றனர். ஆனால், கல்குவாரிகளில், தமிழகத்திற்குள் இயக்கும் லாரிகளுக்கு அனுமதி சீட்டு வழங்குவதில்லை. கேரளாவில் இருந்து கனிம வளம் எடுத்துச் செல்ல வரும் வாகனங்க ளுக்கு, அனுமதி சீட்டு தாராளமாக வழங்கு கின்றனர்.

அரசு அனுமதி சீட்டு இலவசம் எனக் கூறினாலும், குவாரிகளில் ஒரு லாரிக்கு, 2,500 ரூபாய் கொடுக்க வேண்டியது உள்ளது. அதே நேரத்தில், கேரள மாநில லாரிக்கு அனுமதி சீட்டு வழங்க, குவாரிகளில் அதிக தொகை வாங்குகின்றனர். கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல, 10 முதல், 14 வீல்கள் கொண்ட கனரக லாரிகள் தான் இயக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் இருந்து தினமும், 8,000 லாரிகளுக்கு மேல் கேரளா செல்கிறது.
கரூர், பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அதிகளவு கனிமவளங்கள் கேரளாவுக்கு செல்கிறது. இதை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், 300 லாரிகளில் மட்டுமே உள்ளூர் தேவைக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதை அதிகாரிகள் பிடிக்கின்றனர். இதனால் எங்கள் தொழில், கட்டுமான தொழில் பாதிக்கப்படும்.
கேரளாவுக்கு அதிகளவு கனிம வளங்கள் சென்றால், தமிழகத்தில் தட்டுப்பாடும் ஏற்படும். குவாரிகளில் இலவசமாக அனுமதி சீட்டு வழங்கும் வரை, ஜி.எஸ்.டி., பில்கள் இருந்தால் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு பேசினர்.
சப் - கலெக்டர் பிரியங்கா பேசுகையில், ''கனிமவள கடத்தல் சம்பந்தமாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கேரளாவுக்கு அதிகளவு செல்வதாகவும், அனுமதி சீட்டு கிடைப்பதில்லை என்ற புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கனிமவள உதவி இயக்குனர் சசிக்குமார் பேசுகையில், ''கனிமவளம் கொண்டு செல்லும் லாரிகள் அனுமதி சீட்டுடன் செல்ல வேண்டும் என்பது விதிமுறை. தமிழகம், கேரளா என, அனைத்து லாரிகளுக்கும் சீட்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவுக்கு அதிகளவில் கனிம வளம் செல்கிறதா என கண்காணிக்கப்படும்,'' என்றார்.