வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கவர்னரையும் பா.ஜ.,வையும் கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பெயரைக் கூட உச்சரிக்கவில்லை.
கருணாநிதியின் நுாற்றாண்டு துவக்க விழா பொதுக்கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் சிறப்புரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், 'நாடெங்கும் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து, பா.ஜ.,வை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும். தமிழக கவர்னரின் சித்து விளையாட்டுகளால், பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்ற உணர்வோடுதான் இருக்கிறோம்' என்றார்.
அரை மணி நேரம் பேசிய அவர், அ.தி.மு.க., என்ற பெயரைக் கூட ஸ்டாலின் உச்சரிக்கவில்லை.

அவருக்கு முன்பாக பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, வி.சி., தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும், அ.தி.மு.க., பெயரைக் கூட குறிப்பிடவில்லை.
இதனால் தமிழக அரசியல் களம் தி.மு.க., - பா.ஜ., இடையேயான போட்டியாக மாறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக, தி.மு.க., முன்னாள் எம்.பி., ஒருவரிடம் பேசியபோது, 'வரும் லோக்சபா தேர்தல், மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமா, வேண்டாமா என்பதற்காக நடக்கும் தேர்தல். எனவே தான், பா.ஜ.,வை எதிர்க்க வேண்டியுள்ளது. சித்தாந்த ரீதியாகவும் பா.ஜ.,வை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்' என்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, 'கடந்த ஒன்பது ஆண்டு கால மோடி ஆட்சியில், தமிழகத்திற்கென எந்த சிறப்பு திட்டமும் இல்லை. ஆனால், குஜாரத்தில் அனைத்து நகராட்சிகளிலும் குழாய் வாயிலாக, சமையல் காஸ் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது' என, குஜராத்தின் வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டார்.குஜராத்தை விட தமிழகம் வளர்ந்துள்ளதாக, தி.மு.க.,வினர் பேசி வரும் நிலையில், அழகிரி இப்படி பட்டியலிட்டது, ஆளும் கட்சியினரை நெளியச் செய்தது.