வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துக்கு வீடு வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவல், கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
'ஞானபீடம், சாகித்ய அகாடமி' போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்ற, தமிழக எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டது.
இதற்காக, அவர்கள் வசிக்கும் மாவட்டம் அல்லது விரும்பும் மாவட்டத்தில், வீடு வழங்கும், 'கனவு இல்லம்' திட்டத்தை, 2021ல், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சாகித்ய அகாடமி விருது பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி, எம்.பி., வெங்கடேசன், ராமகிருஷ்ணன் உட்பட, 16 பேருக்கு வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு, எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இப்பட்டியலில், வைரமுத்து பெயரும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து சர்ச்சையும் கிளம்பி உள்ளது.
'வசதி படைத்த வைரமுத்து போன்ற எழுத்தாளர்களுக்கு, வீடு வழங்குவதற்கு பதிலாக, ஏழ்மை நிலையில் உள்ள எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கலாம்' என, சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கனவு இல்லம் திட்டத்தில், தமிழக அரசின் உயரிய இலக்கிய விருதுகளான, திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன் விருதுகளைப் பெற்றவர்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என, தமிழ் மாநில தமிழ்ச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
- நமது நிருபர் -