சென்னை: விளைச்சல் குறைவு மற்றும் பதுக்கலால், துவரம் பருப்பு விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் ஆண்டுதோறும், 600 டன் துவரம் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இது, தேவையை விட குறைவு. எனவே, வெளிமாநிலங்களில் இருந்து அதிகம் வருகிறது. நடப்பாண்டை சிறுதானியங்கள் ஆண்டாக, ஐ.நா., சபை அறிவித்துள்ளதால், மத்திய, மாநில அரசுகள் சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்க, பல்வேறு மானிய உதவிகளை வழங்கி வருகின்றன.

எனவே, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களுக்கு மாற்றாக, சிறுதானியங்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர். விளைச்சல் குறைவால், பருப்பு வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை அதிகரித்து உள்ளது. இதை அறிந்த ஆன்லைன் வியாபாரிகள், பல ஆயிரம் டன் பருப்பு வகைகளை கிடங்குகளில் பதுக்கி வருகின்றனர்.
இதனால், துவரம் பருப்பு தட்டுப்பாடு அதிகரித்து, ஒரே வாரத்தில், 40 ரூபாய் உயர்ந்து, கிலோ, 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பருப்பு வகைகள் பதுக்கலை கட்டுப்படுத்த, கூட்டுறவு துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன், மே மாதம், திருவள்ளூர் மாவட்ட கிடங்குகளில் ஆய்வு செய்தார். அதிகம் இருப்பு வைப்பதை தடுக்க முயற்சி எடுத்தார்.
அவர், சென்னை மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டு விட்டதால், அவரால் துவங்கி வைக்கப்பட்ட பணிகளை, தற்போதுள்ள அதிகாரிகள் கையில் எடுத்தால் தான், பருப்பு வகைகளின் விலையை கட்டுப்படுத்த முடியும். இதற்கான உத்தரவுகளை அரசு பிறப்பிக்க வேண்டியது அவசியம்.