வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், விதிகளை மீறினால் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமலர்
தமிழகத்தில் விளம்பர பலகைகளை 15 ஆண்டுகளுக்கு முன்பே உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இருந்த விளம்பர பலகைகளுக்கு, இப்போதைய தி.மு.க., அரசு உள்ளாட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து அனுமதித்துள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக 'தினமலர்' நாளிதழ் மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த ஜூன் 1ம் தேதி கோவையில் சட்டவிரோத விளம்பர பலகையை சாலையோரம் நிறுவியபோது சாரம் சரிந்து, தொழிலாளர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது தொடர்பான செய்தியும் நமது 'தினமலர்' நாளிதழ் மற்றும் இணையதளத்தில் செய்தி வெளியானது.
இதனையடுத்து விளம்பர பலகைகள், பேனர் போன்றவைகளை நிறுவ கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும், மீறி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தன. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அதன்படி இனி, திருத்தப்பட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி உரிமம் பெறாமல் பேனர் வைக்க முடியாது.

சிறை - அபராதம்
அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். பேனர், விளம்பர பலகைகள் வைப்பதில் விதிகளை மீறினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். உரிமக்காலம் முடிந்த பின்பு வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பேனர் உள்ளிட்டவற்றால் உயிரிழப்பு நேர்ந்தால் அதனை வைத்த நிறுவனம் அல்லது தனிநபர்தான் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.