மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே அரசு பஸ் மோதி கார் ஓட்டிச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கும்பகோணத்திலிருந்து சிதம்பரம் நோக்கி அரசு போக்குவரத்து கழக பஸ் நேற்று இரவு 10 மணி அளவில் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது எருக்கூர் தூய சிந்தாத்திரை மாதா ஆலயம் அருகே சென்று கொண்டிருந்தபோது புத்தூரிலிருந்து சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்த காரில் மோதியதில் காரின் முன் பகுதி நசுங்கி காரை ஓட்டிச் சென்ற புத்தூர் மேல தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவபாலன் (38) என்பவர் காருக்குள்ளேயே உடல் நசுங்கி இறந்தார்.
காரில் பயணம் செய்த புத்துரை சேர்ந்த சக்திவேல் (28), பாலமுருகன் (27) ஆகிய இருவரும் சிறு காயத்துடன் உயிர் தப்பினர். அரசு பஸ் சாலை ஓரம் சென்று நின்றது. இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சிவபாலன் புத்தூருக்கு வந்து ஒரு மாத காலம் ஆகிறது. இவருக்கும் ஓவியா (32) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று மூன்று வருடம் ஆன நிலையில் இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.