வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 'ஓபன் ஏ.ஐ' நிறுவனத்தின் சி.இ.ஓ., சாம் ஆல்ட்மேன், பிரதமர் மோடியை சந்தித்து தொழில்நுட்பம் குறித்து ஆலோசித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று 'ஓபன் ஏ.ஐ'. இந்நிறுவனம் 'சாட் ஜிபிடி' என்னும் மென்பொருளை தயாரித்து உலகளவில் பிரபலமானது. இந்நிறுவனத்தின் சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன், இந்தியா, இஸ்ரேல், ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், தென் கொரியா ஆகிய ஆறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். செயற்கை நுண்ணறிவு மூலம் இந்தியா மற்றும் தொழில்நுட்பத்துறை எப்படி பயன்படும் என்பதை குறித்து பிரதமர் மோடியுடன் அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இச்சந்திப்பு குறித்து ஓபன் ஏ.ஐ., நிறுவன சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் கூறுகையில், 'நரேந்திர மோடி உடனான சிறந்த உரையாடல். இந்தியாவின் நம்பமுடியாத தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் நாடு எவ்வாறு பயனடைகிறது என்பதைப் பற்றி விவாதித்தோம். இது தொடர்பான அனைத்து சந்திப்புகளையும் ரசித்தேன்' என்றார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, 'நுண்ணறிவுள்ள உரையாடலுக்கு நன்றி சாம் ஆல்ட்மேன். இந்தியாவின் தொழில்நுட்ப சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் ஏ.ஐ.,யின் சாத்தியம் உண்மையில் மிகப்பெரியது; அதுவும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரியது. எங்கள் குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக எங்கள் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வரவேற்கிறோம்.' என்றார்.