ஜூன் 10, 1935
தஞ்சாவூரில், விஸ்வநாதன் --விசாலாட்சி தம்பதிக்கு மகளாக, 1935ல், இதேநாளில் பிறந்தவர்சரோஜா என்கிற, சரோஜ் நாராயணசுவாமி.
சிறுவயதில் மும்பையில் வளர்ந்தார். ஆங்கில இலக்கியம் படித்து, டில்லியில், யூகோ வங்கியில் பணியாற்றினார். வங்கிக்கு அருகே இருந்த வானொலி நிலையத்தால் ஈர்க்கப்பட்டார். பின், 'வாணி' பயிற்சி முடித்து, முதல் பெண் தமிழ் செய்தி வாசிப்பாளராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் பணியில் சேர்ந்து, நாராயணசுவாமியை மணந்தார்.
தினமும் காலை, 7:15 மணிக்கு, டில்லி வானொலியில் இருந்து ஒலிபரப்பாகிய இவரின்,'ஆகாஷ்வாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி' என்ற கணீர் குரலுக்கும், தெளிந்த உச்சரிப்புக்கும், 1960 முதல்- 1980 வரை நேயர்கள் காத்திருந்தனர்.
பிரதமர்களாக பதவி வகித்த மொரார்ஜி தேசாய், இந்திரா, நரசிம்மராவ் உள்ளிட்ட பல தலைவர்களை பேட்டி கண்ட இவர், 2022 ஆகஸ்ட் 13ல், தன், 87வது வயதில் மறைந்தார்.
செய்தி வாசிப்புக்காக, 'கலைமாமணி விருது' பெற்ற, பாரதியாரின் ரசிகை பிறந்த தினம் இன்று!