வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-நீலகிரி நீதிமன்ற வளாகத்தில், பெண் வழக்கறிஞர்களுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
![]()
|
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில், சமீபத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் திறக்கப்பட்டது.
இங்கு, பெண் வழக்கறிஞர்களுக்கு கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என, நீலகிரி பெண் வழக்கறிஞர்கள் சங்கம் குற்றம் சாட்டியது.
மேலும் இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ் மற்றும் ராஜேஷ் பிண்டல் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
நீலகிரி நீதிமன்ற வளாகத்தில், பெண் வழக்கறிஞர்களுக்கான கழிப்பறை வசதிகள் குறித்து, பதிவாளர் ஜெனரல் தாக்கல் செய்த அறிக்கை திருப்தி அளிக்கவில்லை.
![]()
|
எனவே, நாளைக்குள், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை, சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கு, வரும் 12ம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement