சென்னை, சென்னை, மேற்கு தாம்பரம், வ.உ.சி., தெருவில், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு, உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் பொன்னிவளவன்.
ரூ.50 ஆயிரம்
இவர், தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் நான்கு இடங்களில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் ராஜா ரமேஷ், 53, என்பவரிடம் மாதா மாதம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
அதற்கு, ராஜா ரமேஷ் மறுப்பு தெரிவிக்கவே, சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட்டில், பல்வேறு விதிமீறல்கள் உள்ளது போன்று, இரண்டு பக்கத்திற்கு 'நோட்டீஸ்' தயாரித்து, ராஜா ரமேஷுக்கு கொடுத்துள்ளார்.
அப்போது, மாதா மாதம், 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் வேண்டும் எனவும், முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனால், மன உளைச்சல் அடைந்த ராஜா ரமேஷ், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை நகர சிறப்பு பிரிவில் புகார் அளித்தார்.
தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை நகர சிறப்பு பிரிவு ஆய்வாளர் மாலா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு, நேற்று மாலை சம்பவ இடத்திற்கு வந்து, ரசாயன பவுடர் தடவிய 10 ஆயிரம் ரூபாயை, ராஜா ரமேஷிடம் கொடுத்தனர்.
'கம்பி'
அந்த பணத்தை, பொன்னிவளவனிடம் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், அவரை கையும் களவுமாக கைது செய்தனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.