பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், துாய்மை பணிகளில், நிரந்தர மற்றும் ஒப்பந்தம் என மொத்தம், 275 துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். துாய்மை பணி மேற்கொள்ள புதிய தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததுடன், புதிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
இதையடுத்து, மொத்தம், 118 ஒப்பந்த துாய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து துாய்மை பணியாளர்கள் கடந்த, 31ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய நிபந்தனைகளை கைவிட்டு, பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார், நேற்று அவர்களுடன் பேச்சு நடத்தினர். அப்போது, நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 54 பேருக்கு பணி வழங்க அரசுக்கு பரிந்துரை அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
இதையடுத்து, சமரசம் ஏற்பட்டதால், துாய்மை பணியாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
துாய்மை பணியாளர்கள் கூறுகையில், 'கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் ஏற்று பணி வழங்குவதாக தெரிவித்ததால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது,' என்றனர்.