திருவொற்றியூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது.
சின்ன காஞ்சிபுரம் என, அழைக்கப்படும் இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாததால், 2008ம் ஆண்டு, பாலாலயம் செய்யப்பட்டு, ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி துவங்கியது.
பல்வேறு காரணங்களால், ராஜகோபுரம் கட்டும் பணி ஜவ்வாக இழுத்து வந்தது. இதன் காரணமாக, கோவில் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறாமல் இருந்தது. மேலும், சுவாமி வீதி உலாக்களும் நடைபெறவில்லை.
இதனால், பக்தர்கள் சுணக்கமடைந்தனர். தற்போது, ராஜகோபுரம் கட்டும் பணி நிறைவுற்ற நிலையில், கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருப்பணிகள் முடிவுற்று, ஆக., 20ல், காலை 6:00 மணி முதல் 7:30 மணிக்குள்ளாக, கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என, திருக்கோவில் நிர்வாகம் தரப்பில், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த, 14 ஆண்டுகளாக பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில், பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்த பக்தர்கள், கும்பாபிஷேகம் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியானதில் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.