கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில், ஆதார் திருத்தம் மற்றும் புதுப்பித்தல் போன்றவைகளுக்கு வழங்கும் டோக்கன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தங்களின் ஆதாரில் உள்ள பிழை மற்றும் ஆதார் புதுப்பித்தல் போன்றவைகளுக்கு தாலுகா அலுவலகம் வந்து, இ-சேவை மையத்தில் பதிவு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
தற்போது, ஐந்து வயதுடைய குழந்தைகளின் ஆதார் மற்றும் பதினைந்து வயதுக்குட்பட்ட நபர்களின் ஆதாரில், கைரேகை, புகைப்படம் புதுப்பித்தல் போன்றவைகள் தாலுகா அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகிறது.
இதற்காக, தினமும், 20 முதல் 25 நபர்களுக்கு மட்டுமே ஆதார் திருத்தம் செய்ய டோக்கன் வழங்கப்படுகிறது. ஆனால், ஆதார் திருத்தம் செய்ய அதிகப்படியான நபர்கள் வருவதால், ஆதார் திருத்தம் செய்ய இயலாமல் திரும்பி செல்கின்றனர்.
இந்நிலையில், டோக்கன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.