ஆவடி, ஆவடி அடுத்த திருநின்றவூர் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் இருந்து வந்த சரக்கு ரயில், திருநின்றவூர் - -நெமிலிச்சேரி ரயில் நிலையத்திற்கு இடையே சென்றபோது, 3 அடி நீளம், 20 கிலோ எடையிலான, தென்னை மரக்கட்டை தண்டவாளத்தின் நடுவில் கிடந்தது.
இதை, ரயில் ஓட்டுனர்கள் மதியழகன் மற்றும் பிரசாந்த் ஆகியோர் கண்டு, உடனே ரயிலை நிறுத்தினர். அதன் பின், ஆவடி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
இதில், திருநின்றவூர் ரயில் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், தன் வீட்டில் இருந்த தென்னை மரத்தை வெட்டி அகற்றி இருக்கிறார். இதில் ஒரு மரக்கட்டையை, அங்கு மது போதையில் இருந்த, அதே பகுதியைச் சேர்ந்த பாபு, 42, என்பவர், தண்டவாளத்தின் மீது வைத்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து, பாபுவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.