வால்பாறை;வால்பாறையில், தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை நேற்று முதல் துவங்கியது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டம், வால்பாறை தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
தாசில்தார் அருள்முருகன் தலைமை வகித்து பேசியதாவது: பருவமழை துவங்கி, மழை தீவிரமடையும் நிலையில், மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களையும், ஆற்றோரப்பகுதியில் வீடுகட்டி வசிக்கும் மக்களையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்த வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, வால்பாறை தற்காலிக முகாமில் தங்க வைக்க வேண்டும். மழை தீவிரமடையும் நிலையில், பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க தேவையான கருவி மற்றும் உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மழையால் சாலையில் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, மின் இணைப்பும் தடையில்லாமல் வழங்க வேண்டும். மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்காமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
கூட்டத்தில், வட்ட வழங்கல் அலுவலர் சுந்தர்ராஜ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.