நொளம்பூர், தென்காசி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார், 41. இவர், வானகரத்தில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக, நேற்று முன்தினம் குடும்பத்துடன் வந்திருந்தார்.
இதற்காக, திருமண வீட்டார் நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், உறவினர்களை தங்க வைத்தனர்.
நேற்று காலை அங்கிருந்து சுரேஷ்குமார், குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு கிளம்பினார். அப்போது, அவரது 6 வயது மகன் மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
தகவலறிந்த நொளம்பூர் போலீசார், அடுக்குமாடி குடியிருப்பின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில், திருமண வீட்டிற்கு வந்திருந்த 'கால் டாக்சி'யில் சிறுவன் தவறுதலாக பின் சீட்டில் ஏறி அமர்ந்துள்ளார். ஓட்டுனரும், அதை கவனிக்காமல் காரை எடுத்துச் சென்று உள்ளார். பின், காரில் சிறுவன் இருந்ததை பார்த்துள்ளார். அதற்குள், போலீசாரும் விரைந்து செயல்பட்டு சிறுவனை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.