- நமது நிருபர் -
நடப்பாண்டு மே மாதம் வரை கோவை மண்டலத்தில், 76 ஆயிரம் பாஸ்போர்ட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு வசதியாக, கோவையில் பாஸ்போர்ட் சேவை மையமும், சேலம், ராசிபுரம், குன்னுார் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்படுகின்றன.
2022-23ம் ஆண்டில், கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில், 1.60 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன; 1.57 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது, 2021ம் ஆண்டை விட, 35 சதவீதம் அதிகம்.
நடப்பாண்டு, மே மாதம் வரை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், 78,914 விண்ணப்பங்கள் பெறப்பட்டன; 76,134 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பூபதி கணேஷ் கூறுகையில், ''பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். போலி இணையதளங்கள் குறித்து, விழிப்புடன் இருக்க வேண்டும். பாஸ்போர்ட் குறித்த சந்தேகங்களுக்கு, 1800 258 1800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.