வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-பைக் டாக்சி மீதான தடையை நீக்கி, புதுடில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டில்லி அரசு தாக்கல் செய்த மனு மீது, மத்திய அரசு பதிலளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
ரேபிடோ, உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள், பைக் டாக்சி சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களின் சேவைக்கு தடை விதித்து, கடந்த பிப்ரவரியில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான புதுடில்லி அரசு உத்தரவிட்டது.
தடையை மீறுவோருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு, ரேபிடோ நிறுவனத்திற்கு புதுடில்லி அரசு 'நோட்டீஸ்' அனுப்பியது.
இதை எதிர்த்து, புதுடில்லி உயர் நீதிமன்றத்தில், ரேபிடோ சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், புதுடில்லி அரசின் தடையை நிறுத்தி வைத்ததுடன், ரேபிடோ நிறுவனத்தின் இறுதி கொள்கை வெளியாகும் வரை, பைக் டாக்சி சேவையை தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் புதுடில்லி அரசு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ் மற்றும் ராஜேஷ் பிண்டல் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனுக்களின் நகலை, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில், மத்திய அரசின் பதிலை தெரிவிக்கும்படி உத்தரவிட்டனர்.