வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, பாலியல் புகார் கூறிய மல்யுத்த வீராங்கனையை, அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், லோக்சபா பா.ஜ., - எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், 66, மீது, மல்யுத்த வீராங்கனையர் பாலியல் புகார் தெரிவித்து, ஒரு மாதத்திற்கும் மேல், தலைநகர் புதுடில்லியில் போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ., மூத்தத் தலைவரும், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சருமான அனுராக் தாக்குருடன், சமீபத்தில், மல்யுத்த வீரர் - வீராங்கனையர் பேச்சு நடத்தினர்.
அப்போது அவர்களிடம், 'இந்த விவகாரத்தில், வரும் 15ம் தேதிக்குள் விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என, அமைச்சர் தாக்குர் உறுதி அளித்தார்.
இதை ஏற்ற மல்யுத்த வீரர் - வீராங்கனையர், 15ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். இந்நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் கூறிய மல்யுத்த வீராங்கனையை, அவரது வீட்டில் உள்ள அலுவலகத்திற்கு, புதுடில்லி போலீசார் நேற்று அழைத்துச் சென்றனர்.
அரை மணி நேரம் நடந்த விசாரணையின் போது, நடந்த சம்பவத்தை மீண்டும் செய்து காட்ட போலீசார் அறிவுறுத்தினர்.