வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை-மும்பையில் பெண்ணை துண்டு துண்டாக்கி குக்கரில் வேக வைத்த விவகாரத்தில், காதலியின் தற்கொலையை மறைக்கவே, உடல் பாகங்களை வெட்டி அப்புறப்படுத்தியதாக கைதான நபர் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் மும்பை அருகே உள்ள கீதா நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அங்கு நேற்று முன்தினம் சோதனை நடத்திய போலீசார், வீட்டில் இருந்து பெண் ஒருவரின் உடல் பாகங்களை அழுகிய நிலையில் கைப்பற்றினர்.
அங்கு, குக்கரில் பெண்ணின் பாகங்கள் வெட்டி வேக வைக்கப்பட்டிருந்த நிலையில், அதையும் கைப்பற்றிய போலீசார், வீட்டில் இருந்த மனோஜ் சானே, 56, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், திருமணம் செய்யாமலேயே மனோஜ் உடன் வசித்து வந்த சரஸ்வதி வைத்யா,32, என்பவரின் உடல் பாகங்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட மனோஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 'கடந்த 2ம் தேதி சரஸ்வதி தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில் இருந்து தப்பவே, அவரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக்கி அப்புறப்படுத்தினேன்,' என மனோஜ் வாக்குமூலம் அளித்தார்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் ஜெயந்த் பஜ்பலே கூறியதாவது:
சரஸ்வதி தற்கொலை செய்து கொண்டதாக மனோஜ் கூறுவது ஏற்க முடியவில்லை.
அவரின் உடல் பாகங்களை அப்புறப்படுத்த நினைத்த மனோஜ், அதில் ஒரு சிலவற்றை தெருநாய்களுக்கு உணவாக போட்டுள்ளது தெரிய வந்துஉள்ளது.
அது மட்டுமின்றி, கைது செய்யப்பட்ட மனோஜ் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொலைக்கான நோக்கம் தெரியாத நிலையில், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லியில், கடந்த ஆண்டு இளம்பெண் ஷ்ரத்தா வாக்கர் காதலனால் கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் பல இடங்களில் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதன் அடிப்படையிலேயே, சரஸ்வதியின் உடல் பாகங்களை பல இடங்களில் வீசியும், குக்கரில் வேக வைத்தும் மனோஜ் அப்புறப்படுத்தியுள்ளது அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.