உலக, நாடு, தமிழக, நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
எஸ்.ராம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: '
ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிய கோர விபத்தில், பயணியர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படாததால், அதற்கு பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
![]()
|
நமக்கு இந்த ராஜினாமா மற்றும் பதவி விலகல் கோரிக்கைகளில் புரியாத புதிர் என்னவென்றால், விபத்துக்கு பொறுப்பேற்று, அமைச்சர் மற்றும் மத்திய, மாநில அரசுகள் பதவி விலகி விட்டால், நடந்த அந்த விபத்து, இல்லை என்றாகி விடுமா... அல்லது பறிபோன உயிர்கள் மீண்டும் வந்து விடுமா... படுகாயம் அடைந்தவர்கள், உடனே குணமடைந்து நடமாட துவங்கி விடுவரா என்பது தான்.
அதிலும், இந்த கம்யூனிஸ்ட் கட்சியினரைபற்றி சொல்லவே வேண்டாம். தங்களுக்கு பதவி இல்லை; ஆகவே, எந்த அரசியல்வாதியும் பதவியில் இருக்கக் கூடாது என்ற பரந்த எண்ணம் உடையவர்கள் அவர்கள்.
தெருவில் நடந்து சென்ற ஒருவர், வாழைப்பழ தோல் வழுக்கி விழுந்தால் கூட, 'அமைச்சரும், அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும்; பதவி விலக வேண்டும்' என்று முழங்குபவர்கள் கம்யூனிஸ்ட்கள். இப்போது, நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகளை பார்த்து, நாம் ஒரு கேள்வி கேட்போம்...
தற்செயலாக நடந்த ஒரு விபத்தை காரணம் காட்டி, 'பிரதமர் மோடி பதவி விலக வேண்டும். மத்திய அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டும். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்பதவி விலக வேண்டும்' என்று, வானுக்கும் பூமிக்குமாய் எகிறி எகிறி குதித்து கோரிக்கை விடுக்கிறீர்களே...
அதிக நாட்கள் இல்லை. கடந்த மே மாத துவக்கத்தில், தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து சில பெண்கள் உட்பட 23 பேர், வைகுண்ட பதவியும், சிவலோக பிராப்தியும் அடைந்தனர். அப்போது, தமிழகத்தில் உலாவும் எந்த அரசியல் கட்சியாவது, 'முதல்வர் பதவி விலக வேண்டும்; மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்; ஒட்டு மொத்த தமிழக அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும்' என்றோ கோரிக்கை விடுத்ததா... இல்லையே ஏன்?
![]()
|
கூட்டணியில் அங்கம் வகித்தால், அந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும் அரசியல் கட்சி என்ன அநியாயம் செய்தாலும், அதை தட்டிக் கேட்க துணிவில்லாமல், அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்க வேண்டும். அப்படித் தானே?
தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும்பா.ஜ., கூட, அந்தச் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து கண்டனம் தெரிவித்ததே தவிர, 'முதல்வர் பதவி விலக வேண்டும். மதுவிலக்கு துறை அமைச்சர்ராஜினாமா செய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கவில்லை. அது தானய்யா அரசியல் நாகரிகம்!
இந்த அரசியல் நாகரிகம், தி.மு.க.,வுக்கும், மற்ற அரசியல் கட்சிகளுக்கும் எப்போது வருமோ?