வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தஞ்சாவூர்,- ''ஒரே ஒரு முறை வாய்ப்பளித்தால் கல்வி, மருத்துவம், இடு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், நேற்று முன்தினம் இரவு நடந்த பா.ம.க., பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:
கர்நாடகாவில் காங்., கட்சி ஆட்சி பொறுப்பேற்றதும், நீர்ப்பாசனத் திட்டத்தை, ஐந்து ஆண்டிற்குள் நிறைவேற்ற, 2 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம்.
தமிழகத்தில் ஆண்டிற்கு, 20 ஆயிரம் கோடி என, ஐந்து ஆண்டிற்கு, 1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கினால், தமிழகத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள நீர் பாசன திட்டங்களை நிறைவேற்றி விடலாம்.
கொள்ளிடம் ஆற்றில், 11 தடுப்பணை கட்ட முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், மணல் குவாரிக்கு அனுமதி வழங்கியுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், லஞ்ச வாங்கும் நிலை இருக்காது.
பா.ம.க.,விற்கு ஒரே ஒருமுறை வாய்ப்பு வழங்கினால், கல்வி, மருத்துவம், விவசாய இடு பொருட்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குவோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.