வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-தமிழகத்தில் ஜாதி பிரச்னை எழும் கிராமங்களில், இரு தரப்பினரிடமும் இணக்கத்தை ஏற்படுத்த, துறவிகள் அடங்கிய சமாதான குழுக்களை ஏற்படுத்துமாறு, ஹிந்து முன்னணி அமைப்புக்கு, ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே அறிவுறுத்தி உள்ளார்.
![]()
|
விழுப்புரம் மாவட்டம்,மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், வழிபாட்டு உரிமை தொடர்பாக, இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், வருவாய்த் துறை அதிகாரிகள் கோவிலை பூட்டி 'சீல்' வைத்துள்ளனர்.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள், கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வீரணம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலும் 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது. அங்கும் கோவில் வழிபாடு தொடர்பாக, இரு சமூகங்களுக்கும் இடையே மோதல் நடந்து உள்ளது.
கோவிலுக்குள் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்களை அனுமதிக்காத பிரச்னை, நாடு முழுதும் இருப்பதால், அனைத்து கிராமங்களிலும், 'பொது கோவில், பொது கிணறு, பொது மயானம்' என்று அறிவித்த ஆர்.எஸ்.எஸ்., அது குறித்து மக்களிடம் பிரசாரம் செய்யுமாறு, தன் தொண்டர்களை அறிவுறுத்தியது.
இந்நிலையில் விழுப்புரம், கரூர் மாவட்டங்களில் கோவில்கள் 'சீல்' வைக்கப்பட்டிருப்பது குறித்து, ஹிந்து முன்னணி தலைவர்களிடம், ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே தொலைபேசியில் விசாரித்துள்ளார்.
இது தொடர்பாக, ஹிந்து முன்னணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில், பட்டியலினத்தவர் உள்பட அனைவரும் வழிபட்டு வருகின்றனர்; அதில் எந்த பிரச்னையும் இல்லை.
ஆனால், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அவ்வூர் பெரியவர்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதால், பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஹிந்து கோவில்கள் அனைத்திலும், ஹிந்துக்கள்அனைவரும் வழிபட உரிமை உள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது என்பதே, ஹிந்து முன்னணியின் நிலைப்பாடு.
![]()
|
சில இடங்களில், இரு சமூகங்களுக்கு இடையே பிரச்னை ஏற்படும்போது, அரசின் நடவடிக்கை என்பது, இரு தரப்புக்கும் இணக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, பிரச்னையை தொடரச் செய்வதாக இருக்கக் கூடாது.
மேல்பாதி பிரச்னை குறித்து, ஹிந்து முன்னணி தலைவர்களிடம் விசாரித்த, ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் ஹொசபலே, 'ஜாதி பிரச்னை ஏற்படும் கிராமங்களில் துறவிகள் அடங்கிய சமாதான குழுவை அமைக்க வேண்டும்.
'அக்குழு இரு தரப்புக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்' என அறிவுறுத்தினார். அதன்படி, சமாதான குழு விரைவில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.