சென்னை-கிண்டியில் கட்டப்பட்டுள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையை, முதல்வர் ஸ்டாலின் வரும், 15ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில், 230 கோடி ரூபாயில், 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதை, ஜனாதிபதிதிரவுபதி முர்மு, இம்மாதம், 5ம்தேதி திறந்து வைப்பதாக இருந்தது.
ஆனால், ஜனாதிபதி வெளிநாட்டிற்கு சென்ற தால், திறப்பு விழா தள்ளிவைக்கப்பட்டது. பின், ஜூலை முதல் வாரம் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகையில் இருந்து, இதுவரை நேரம் ஒதுக்காத நிலையில், வரும், 15ம் தேதி திறப்பு விழா நடக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், ''ஜனாதிபதியிடம் நேரம் கேட்டுள்ளோம். அவர் வருவது குறித்து, இரண்டு நாட்களில் தெரிந்துவிடும். ஒருவேளை அவர் வராவிட்டால், 15ம் தேதி, கிண்டி பல்நோக்கு அரசு மருத்துவமனையை, முதல்வர் திறந்து வைப்பார்,'' என்றார்.