திருப்புவனம்-சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நேற்று பகலில் ஒரு மணி நேரம் சூரியனைச் சுற்றிலும் தோன்றிய ஒளிவட்டம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் வெயிலின் தாக்கம் சற்று கூட குறையாமல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
பகலில் மக்கள் வெளியில் நடமாடவே முடியவில்லை. நேற்று மதியம் 12:00 மணிக்கு திருப்புவனத்தில் சூரியனைச் சுற்றிலும் மிகப்பெரிய ஒளிவட்டம் தோன்றியது. ஒரு மணி நேரத்திற்குப்பின் மறைந்து விட்டது.
கிராமமக்கள் கூறும்போது, 'அகல்வட்டம் பகல் மழை என்பது பழமொழி. இது தோன்றினால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை' என்றனர்.
வானியல் வல்லுனர்கள் கூறுகையில், இதன் பெயர் ஆன்ட்லியா என்பதாகும், வளிமண்டலத்தின் மேற்பரப்பில் மழைமேகங்கள் செல்லும் போது பனி கட்டி துகள்களாக மாறும், சூரிய ஒளி அதில் படும் போது பிரதிபலிக்கும். குறைந்த பட்ச ஒளிவிலகல் கோணம் என்றும் அழைக்கப்படும், என்றனர்.
மற்ற பகுதிகளில் கோடை மழை பெய்த நிலையில் திருப்புவனம் வட்டாரத்தில் மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
அகல்வட்டம் தோன்றியதால் மழை பெய்யும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.