வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மூணாறு, -கேரளாவில் தென் மேற்கு பருவ மழை நேற்று முன் தினம் துவங்கிய நிலையில் இன்று ஐந்து மாவட்டகளுக்கு பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்டை' வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
![]()
|
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஆண்டு தோறும் ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். கடந்தாண்டு வழக்கத்தை விட முன்கூட்டி மே 28 துவங்கியது. இந்தாண்டு ஜூன் 4ல் பருவ மழை துவங்கும் என அறிவிக்கப்பட்டும் 4 நாட்கள் தாமதமாக நேற்று முன்தினம் துவங்கியதாக வானிலை மையம் தெரிவித்தது. அதனை உறுதிபடுத்தும் வகையில் நேற்று மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
'எல்லோ அலர்ட்'
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கை விடப்பட்டது. இன்று முதல் ஜூன் 12 வரை இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம் திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
விளைபொருட்கள் சேதம்
மாநிலத்தில் ஜூன் ஒன்று முதல் நேற்று வரை பெய்த மழையால் 1376 விவசாயிகளின் 1,30,897 ஹெக்டரில் விளை பொருட்கள் சேதமடைந்தன. அதன் மதிப்பு ரூ.6.39 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கூடுதலாக வயநாடு மாவட்டத்தில் ரூ. 2.90 கோடி மதிப்பிலான விளை பொருட்கள் சேதமடைந்தன.
![]()
|
அணை திறப்பு
இடுக்கி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மூணாறு உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வரும் நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தொடுபுழா அருகில் உள்ள மலங்கரா அணையில் நீர்மட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு மதகுகள் வழியாக வினாடிக்கு 234 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
தொடுபுழா அருகே முட்டம் பொறியியல் கல்லூரி அருகே ரோட்டில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.