வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை, தமிழக மாணவர்கள் இழந்துள்ளனர்.
எஸ்.ஜி.எப்.ஐ., என்ற இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 2022 - 23ம் கல்வி ஆண்டுக்கான 66வது தேசிய விளையாட்டு போட்டிகள் டில்லி மற்றும் மத்திய பிரதேசத்தில் நேற்று முன்தினம் துவங்கின. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5300 பேர் பங்கேற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு வட்டார மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் கடந்த கல்வி ஆண்டில் நடத்தப்பட்டுள்ளன.
தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாநில அளவில் தேர்ச்சி பெற்ற 250 மாணவியர் உள்பட 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தயாராக இருந்தும் அவர்களை அழைத்து செல்ல பள்ளிக் கல்வி துறையும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த போட்டியில் மாணவர்கள் பங்கேற்று தங்கம் வென்றிருந்தால் 190; வெள்ளி வென்றால் 160; வெண்கலம் வென்றால் 130; பங்கேற்றால் 50 என, புள்ளிகள் கிடைக்கும்.

இந்த புள்ளிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் பிளஸ் 2வுக்கு பின் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் உள்ளிட்ட உயர் கல்வி படிப்புகளில் விளையாட்டு பிரிவில் எளிதாக சேர்க்கை பெற முடியும்; எதிர்கால வேலைவாய்ப்புக்கும் உதவும்.
தேசிய போட்டிகளில் வென்று கோப்பை பதக்கம் பெற்று சாதனை படைக்க விரும்பிய மாணவர்களின் கனவு அதிகாரிகளின் அலட்சியத்தால் தகர்ந்துள்ளதாக, பெற்றோரும் ஆசிரியர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர்கள் சங்க செயல் தலைவர் தேவி செல்வம் கூறுகையில் ''தேசிய விளையாட்டு போட்டிக்கான தகவல் முன்கூட்டியே கிடைக்கவில்லை என்கின்றனர் அதிகாரிகள். ஆனால் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு மே மாதமே மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது.
''அந்த கடிதத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதாக தெரிகிறது,'' என்றார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
புதுச்சேரி சார்பில் தேசிய அளவில் மாணவர்கள் பங்கேற்கும்போது தமிழக மாணவர்கள் அணியை தேர்வு செய்யாத பள்ளி கல்வி துறையின் மெத்தனப்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்தாண்டு 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்தவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வி துறையின் அலட்சியத்தால் தமிழக மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.
விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி கூறியதாவது: இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முறையாக தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தினால் இது நடந்துள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.