வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால், நாட்டு மக்கள் உதவுவார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

தலைவர்கள் நியமனம்
சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து, பின்னர் தனது அறிவிப்பை திரும்ப பெற்றார் சரத் பவார். கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தற்போது புதிய பதவியை உருவாக்கி தலைவர்களை சரத்பவார் இன்று(ஜூன் 10) நியமித்துள்ளார். அதன்படி பிரபுல் படேல், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் நிகழ்ச்சியில் சரத்பவார் பேசியதாவது:
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இந்த நாட்டு மக்கள் உதவுவார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். வரும் ஜூன் 23ம் தேதி, பீஹாரில் அனைவரும் கூடி, விவாதித்து, ஒரு முடிவு எடுக்க உள்ளோம். நாடு முழுவதும் பயணம் செய்து, அதை மக்களுக்கு புரிய வைப்போம்.

உங்கள் அன்பின் காரணமாக, எனது ராஜினாமாவை திரும்பப் பெற்றேன். கட்சியின் மூத்த தலைவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தையும் நான் மதிக்கிறேன். கல்வி, விவசாயம், ஒத்துழைப்பு, விளையாட்டு மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ய உள்ளேன். இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் தொடர்பான பிரச்னைகளிலும் கவனம் செலுத்த உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.