வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: வெளிநாடு சென்று நாட்டு அரசியலைப் பற்றி விவாதிப்பது தவறு. இதை மக்கள் கவனித்து வருகின்றனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மோடி அரசின் ஒன்பது ஆண்டு நிறைவை முன்னிட்டு குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் உள்ள சித்பூர் நகரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: தேசபக்தியுள்ள எந்தவொரு நபரும் இந்திய அரசியலை இந்தியாவிற்குள்ளேயே விவாதிக்க வேண்டும். வெளிநாடு சென்று நாட்டு அரசியலைப் பற்றி விவாதிப்பது தவறு.
இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல். நாட்டு மக்கள் இதை உன்னிப்பாகப் கவனித்து வருகின்றனர். பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் நடுத்தர மக்களின் கனவை நிறைவேற்றியுள்ளார். பாஜ., ஆட்சி காலத்தில் நடுத்தர மக்களின் நிதிநிலை வேகமாக வளர்ந்து வருகிறது.

பிரதமர் பல புதிய கல்வி நிலையங்களை திறந்தும், மானிய விலையில் வீடுகளை வழங்கியும், லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியும் அவர்களது கனவுகளை நனவாக்கியுள்ளார். மலிவு விலையில் கிடைக்கும் மருந்துகள் முதல் மலிவான பயணங்கள் வரை, பிரதமர் மோடி நடுத்தர வர்க்கத்தினரை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.