பாட்னா: ‛‛ கோட்சே, இந்தியாவின் மரியாதைக்குரிய நபர்'' என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீஹார் சென்றுள்ள கிரிராஜ் சிங், பத்திரிகையாளர்களை சந்தித்த போது கூறியதாவது: நாதுராம் கேட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர். அவர், பாபர், அவுரங்கசீப் போன்ற முகலாயர்கள் போல் படையெடுத்து வந்தவர் அல்ல.
ஆகையால் பாபர், அவுரங்கசீப்பின் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவர்கள் நிச்சயம் பாரத அன்னையின் மகனாக இருக்க முடியாது. கோட்சே இந்தியாவில் பிறந்தவர். இவ்வாறு அவர் கூறினார்.
பேசியதன் பின்னணி
மஹாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் வெளியான பதிவால் கலவரம் மூண்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த மஹாராஷ்டிரா துணை முதல்வர் பட்னாவிஸ், முகலாய மன்னர்களை புகழ்வது போன்று விஷமங்களை ஊக்குவிக்க கூடாது. அவுரங்கசீப்பை துதிபாடுவதை அனுமதிக்க முடியாது. சில பகுதிகளில் எங்கிருந்து அவுரங்கசீப்பின் வம்சாவளியினர் தோன்றினார்கள் எனத் தெரியவில்லை எனக்கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பா.ஜ., தலைவர் பட்னாவிஸ், வழித்தோன்றல்களை அடையாளம் காண்பதில் நிபுணராக உள்ளார். அப்படியே, அவர் கோட்சேவின் வழித்தோன்றல்களையும் அடையாளம் கண்டால் நன்றாக இருக்கும் எனக்கூறியிருந்தார்.
ஒவைசியின் கருத்து குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கிரிராஜ் பதிலளிக்கும்போது, கோட்சே இந்தியாவில் பிறந்தவர். இந்தியாவின் போற்றத்தக்க மகன் எனக்கூறினார்.
கண்டனம்
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் வெளியிட்ட அறிக்கை: கோட்சே இந்தியாவின் போற்றத்தக்க மகன் என்றும், முகலாயர்களை போல் அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் இல்லை என்றும், இந்தியாவில் பிறந்தவர் என்றும் கூறி இருக்கிறீர்கள். உங்களின் இந்த கருத்தால், பலர் உங்களை இந்தியாவின் போற்றத்தக்க மகன் என்று அழைக்க மாட்டார்கள். கொலையாளியின் பிறந்த இடத்தை கொண்டு அவரைப் போற்ற முடியாது. இந்த கருத்தை பிரதமரும், உள்துறை அமைச்சரும் கண்டிப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.