சென்னை; அதிகாரிகள் தகவல் சரியாக பரிமாறி கொள்ளாததால் தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க முடியவில்லை என அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார். இதற்கு அரசு அதிகாரிகளைப் பலிகடாவாக்கி, பள்ளி மாணவர்களின் கனவுகளை கலைத்திருப்பது நியாமா? என அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து, உதயநிதி நிருபர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.
அப்போது, உதயநிதி கூறியதாவது:
தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காமல் போனதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதிகாரிகள் தகவல் சரியாக பரிமாறி கொள்ளாததால் தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க முடியவில்லை. விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக அந்த போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. அதன் பின் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஆனால், தொடர்ந்து கண்காணிக்காமல் விட்டுவிட்டார்கள். இனிமேல் இந்த தவறு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்து, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பொறுப்பின்மையை மறைக்க, அரசு அதிகாரிகளைப் பலிகடாவாக்கி, தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பிரகாசிக்கும் கனவுடன் இருந்த தமிழக பள்ளி மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா?.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அலசியத்தால், தமிழக பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.