பல்லடம்;அறிவித்தபடி வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும் என, லஞ்சத்துக்கு எதிராக பல்லடம் பத்திர எழுத்தர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக முதல்வர் தனிப்பிரிவு, பதிவுத்துறை ஐ.ஜி., உட்பட பலருக்கும் பத்திர எழுத்தர்கள் புகார் அனுப்பியுள்ளனர். இது தொடர்பான நடவடிக்கை இல்லாததை தொடர்ந்து, ஜூன் 12 முதல் ஒரு வாரத்துக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக பத்திர எழுத்தர்கள் அறிவித்தனர்.
இதற்கிடையே, இன்று பதிவுத்துறை டி.ஐ.ஜி., சாமிநாதன் நேரடி விசாரணை மேற்கொண்டார். பத்திர எழுத்தர்கள், வக்கீல்கள் மற்றும் பதிவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
பத்திர எழுத்தர்கள் கூறியதாவது: தமிழகத்தில் எங்கும் இல்லாதபடி பல்லடத்தில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது சென்ட் ஒன்றுக்கு ஆயிரம் முதல் பத்திர மதிப்பை பொறுத்து பல லட்சங்கள் லஞ்சம் நிர்ணயிக்கப்படுகிறது.
தமிழகத்தில் எங்காவது இது போன்ற போராட்டம் நடந்துள்ளதா. பத்திர எழுத்தர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு அலுவலகத்தின் மீது குற்றம் சாட்டுகிறோம் என்றால், அது குறித்து அதிகாரிகள் யோசிக்க வேண்டும் மிகவும் கொதித்துப் போய் தான் இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். வெறும் கண்துடைப்புக்காக இந்த விசாரணை நடக்கிறது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு என்ற நிலை இங்கு உள்ளது. இது மக்களுக்கான அலுவலகம் கிடையாது. பதிவாளர்கள் பிரவீனா மற்றும் ஈஸ்வரி ஆகியோரை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய வேண்டும். அடுத்து வரும் பதிவாளருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குவோம் என்றனர்.
தவறு செய்தது யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் ஆதாரங்களை எடுத்து வாருங்கள் உரிய விசாரணைக்கு பின் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன் என டி.ஐ.ஜி., கூறினார் இதை ஏற்காத பத்திர எழுத்தர்கள், நீங்கள் அதிகாரிகளுக்கு ஆதரவாகவே பேசுகிறீர்கள். இதில், எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் அறிவித்தபடி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி வெளியேறினர். தொடர்ந்து ஜூன் 26 அன்று ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என டி.ஐ.ஜி., கூறினார்.