ஜூன் 11, 1932
கேரள மாநிலம் திருப்பணித்துராவில், விஸ்வநாத கோபாலகிருஷ்ணனின் மகனாக, 1932ல் இதே நாளில் பிறந்தவர் டி.வி.கோபாலகிருஷ்ணன்.அரசவை இசைக் கலைஞரான தந்தையிடம் வாய்ப்பாட்டு கற்றார். தன் மாமாவிடம் மிருதங்கம் வாசிக்க கற்று, ஆறாவது வயதில், கொச்சி அரண்மனையில் அரங்கேற்றம் செய்தார். பின், சென்னை வந்து, செம்பை வைத்தியநாத பாகவதரிடம் கர்நாடக இசை பயின்று, அவருக்கே மிருதங்கம் வாசித்தார். தன், 14வது வயதில் கச்சேரி செய்யத் துவங்கி, 20வது வயதுக்குள், வாய்ப்பாட்டிலும், மிருதங்க இசையிலும் புகழ்பெற்றார். கிருஷ்ணானந்திடம் ஹிந்துஸ்தானி இசையையும் கற்றார். இவரின், 'வாய்ஸ் தெரபி' சிகிச்சையால், பல இசை கலைஞர்களின் குரல் பிரச்னையை சரி செய்தார். மேற்கத்திய வாத்தியங்களான, சாக்சபோன், வயலின் உள்ளிட்டவற்றிலும் பயிற்சி பெற்று, ஜாஸ் கச்சேரிகளையும் நடத்தினார். இவரிடம், இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ராஜ்குமார் பாரதி, கத்ரி கோபால்நாத், சிவமணி உள்ளிட்டோர் பயிற்சி பெற்றுள்ளனர். 'பத்மபூஷண், சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, சங்கீத சூடாமணி, நாத கோவிந்தா' உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்.இசைக் கலைஞர்களை வளர்க்கும், 'டி.வி.ஜி'யின், 91வது பிறந்த தினம் இன்று!