தேவனஹள்ளி,-கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்தின் திறனை அதிகரிக்க, விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.
நாட்டில் அதிக பயணியர் பயணிக்கும் இரண்டாவது பெரிய சர்வதேச விமான நிலையமாக, கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் திகழ்கிறது.
கடந்தாண்டு திறக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட உள்ளன. முதல் முனையத்தில் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
இந்நிலையில், விமான நிலையத்தின் திறனை அதிகரிக்க, விமான நிலைய ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், விமான நிலையத்தின் முதல் முனையத்தை திறமையாக கையாள புதுப்பித்தல் அவசியம். இந்த முனையம், 22 கோடி பயணியரை கையாளும் திறன் கொண்டது.
தற்போது, 33 கோடி பயணியர் வருவதால், இதற்கு தீர்வு காண, புதுப்பித்தல் அவசியம். ஒரு மணி நேரத்துக்கு குறைந்தது 27 உள்நாட்டு விமானங்கள் புறப்படுகின்றன.
பெங்களூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 3,900 பேர் பயணிக்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 4,500 பயணியரை கையாளும் வகையில் திறன் மேம்படுத்தப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்ட பின், இம்முனையத்தில், ஆண்டுதோறும் 35 கோடி பயணியர் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.