பெங்களூரு-'கர்நாடக மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் விவாகரத்து பெற்ற மற்றும் பிரம்மச்சாரி ஆண்களுக்கு, ஆறு மாத குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்படும்' என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
வழக்கமாக, அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, ஆறு மாத குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.
இந்த வேளையில், அரசின் பல துறையை சேர்ந்த விவகாரத்து பெற்றவர்கள், மனைவியை இழந்தவர்கள் அல்லது குழந்கைளை தத்தெடுக்கும் பிரம்மசாரிகள், குழந்தை பராமரிப்பு விடுப்பு கேட்டு கோரிக்கை விடுத்திருந்தனர்.
தற்போது ஆண்களுக்கும் ஆறு மாத குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அரசாணை:
மனைவியை இழந்தவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் அல்லது குழந்தைகளை வளர்க்கும் பிரம்மசாரி ஆண்களுக்கு ஆறு மாதம் குழந்தை வளர்ப்பு விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஆண் ஊழியர்கள் ஆறு மாதம் வரை, அதாவது 180 நாட்கள் வரை விடுமுறை எடுக்கலாம். அதற்கு மேல் நீட்டிக்க கூடாது.
இந்த விடுமுறை காலத்தில், ஆண்கள் திருமணம் செய்து கொண்டால், அவர்கள் திருமணம் செய்த நாளில் இருந்து விடுமுறை ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
குழந்தை பராமரிப்பு திட்டத்தை, 2021ல் எடியூரப்பா முதல்வராக இருந்த போது அறிமுகப்படுத்தினார். அப்போது மகப்பேறு விடுப்பு தவிர்த்து, குழந்தைகளை வளர்க்க பெண் ஊழியர்கள் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர். பெண் ஊழியர்கள் ஆறு மாதம் வரை விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.